541. ஈழப்பிரச்சினையும் இந்தியத் தேர்தலும்
பெரிய அலசல் எதுவும் கிடையாது. சில எண்ணங்கள்:
1. ஈழத்தமிழர் பிரச்சினையை இந்தியாவில் உள்ள பிற மாநிலத்தவருக்கு சரியாக எடுத்துச் செல்லவில்லை என்ற கருத்துக்கு: எடுத்துச் சென்றிருந்தாலும் பெரிய அளவில் பலன் இருந்திருக்காது என்பது தான் யதார்த்தம். இதற்கு பிற மாநிலத்தவர் தமிழர்களை வெறுக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இந்தியத்தமிழர்கள் பிற நாடுகளில் மாட்டிக்கொண்டு அல்லல்படுவதற்கே, தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் கவனம் ஈர்க்கப்படாத நிலையில், வேற்று நாட்டவரான ஈழத்தமிழருக்கு அவர்களிடம் எந்த விதமான அக்கறையை எதிர்பார்க்க முடியும் ?
2. மேற்கூறியதற்கு, இந்திய ஆங்கில மீடியாவின் பொறுப்பற்றத்தனமும் ஒரு முக்கியக் காரணம். ஈழத்தமிழர் படும் இன்னல்கள், அங்கு ஏற்படும் பெரும் உயிரிழப்பு குறித்து எதுவும் பேசாமல், இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளிடமிருந்து இந்த இடத்தைக் கைப்பற்றியது / அந்த இடத்தை கைப்பற்றியது என்று கிரிக்கெட் மேட்ச் வர்ணனையைத் தான் நெடுங்காலமாக செய்து வருகிறது :-( அங்கு நிலவும் மனித அவலம் குறித்த கண்ணோட்டம் இந்திய மீடியாவில் செய்திகளாகவோ, விவாதங்களாகவோ வரவில்லை!
3. எந்த தமிழக அரசியல் கட்சியும், உருப்படியாக ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பது ஒரு புறமிருக்க, மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, இப்பிரச்சினையில் பெரும் நாடகம் ஆடியிருக்கிறது என்பதில் பெரும்பான்மையான தமிழர்களுக்கு உடன்பாடு இருக்கிறது. அதனால், காங்கிரஸ்-திமுக கூட்டணி இத்தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவும் / தழுவ வேண்டும்.
அந்த ஒரு காரணத்திற்காக, அதாவது வாக்குகள் சிதறாமல் இருக்க தனித்துப் போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் (பிஜேபி, தேமுதிக..) அல்லது சுயேச்சைகளுக்கும் (சரத்பாபுவும் சேர்த்து) இம்முறை வாக்களிக்காமல் இருப்பது நல்ல யுக்தியாக அமைய வாய்ப்புள்ளது. "தனி ஈழம் தான் தீர்வு" என்று தற்போது ஜெ முழங்குவது ஆச்சரியத்தை (ஏன் அதிர்ச்சியையும்!) தந்தாலும், அதிமுக கூட்டணிக்கே ஆதரவு அளிக்க வேண்டிய நிலைமை இருப்பதாகவே தோன்றுகிறது! மத்தியில் அரசு மாறினால், ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பித் தான் ஆக வேண்டும்!
4. இந்தியாவின் அறிவுஜீவி செக்யூலரிஸ்ட்களும், லிபரல்களும் வெகு தூரத்தில் நடக்கும் பாலஸ்தீனிய, இராக் பிரச்சினைகளுக்கு இங்கு ஓங்கி குரலெழுப்பி பெரிய அளவில் கலாட்டா செய்வார்கள். மீடியாவும் அவர்களுக்கு நல்ல விளம்பரம் அளிக்கும் ! இஸ்ரேல் தாக்குதலில் சிவிலியன்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் (நியாயமானது தான்!) தெரிவிக்கும் இவர்கள், நம் அண்டையில் நடக்கும் (இலங்கை ராணுவத் தாக்குதலால் ஏற்படும்) அநியாயப் படுகொலை (இன ஒழிப்பு!) பற்றி வாய் திறக்க மாட்டார்கள் :-( ஹெஸ்பொல்லா ஒரு தீவிரவாத இயக்கம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!!!
5. விடுதலைப் புலிகள் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறுபவர்களுக்கு: சரி, போரின் இறுதிக் கட்டத்தில் அப்படி நடக்கிறது என்பதை ஓரளவு ஒப்புக் கொள்ளலாம்.
ஆனால், கடந்த ஒரு வருடமாக, போர் என்ற பெயரில், இலங்கை ராணுவம் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்ததற்கு (state terrorism) உலக நாடுகள் தரப்பிலிருந்து முனகலான கண்டனம் தான் கேட்டுக் கொண்டிருந்தது! (அதுவும், சீனாவும், பாகிஸ்தானும், இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை என்று உளறி வருகின்றன!)
இப்போது தான், உலகெங்கும் தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் சற்று உரக்க குரல் கொடுத்துள்ளன! ஆனால், ராஜபக்ஷே யார் பேச்சையும் இந்த நிமிடம் வரை கேட்கவில்லை என்பது நாம் அறிந்தது தான்...
எ.அ.பாலா
டெயில்பீஸ்: போர் நிறுத்தத்திற்கான மற்றும் பேச்சு வார்த்தைக்கான அமெரிக்க வேண்டுகோளை நிராகரித்து, நேற்று கோத்தபயா ராஜபக்ஷே "எங்களுக்கு எது சரி என்று எடுத்துச் சொல்ல நீங்கள் யார்?" என்று மிகவும் ஆணவமாக பேசியிருப்பது (இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி) குறிப்பிடத்தக்கது.
"The US state department should be ashamed of their request. If anybody tells me that, I will tell them to mind their own business. This is completely an internal issue..... We will not allow anyone to interfere"
இனிமேல் பேசி, வேண்டுகோள் விடுத்து, இலங்கைக்கு யாரும் எதையும் புரிய வைக்க முடியாது என்பது தெளிவு! மற்றவர்களை அண்டிப் பிழைக்கும் நிலையில் இருக்கும் ஒரு சுண்டைக்காய் நாட்டுக்கு இத்தனை திமிர் இருப்பதற்கு சீனக் கம்யூனிஸ்ட்களும் ஒரு முக்கியக் காரணம்.
அப்படியே கீழுள்ள வாக்குப்பெட்டியில் தயவு செய்து வாக்களித்து விட்டுச் செல்லவும்: